.

Saturday, July 18, 2015

தமிழ் விழா
தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை நடத்தும் தமிழ்விழா 16-ஆம் ஆண்டாக கடலூர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாள் அன்று மாலை வெகு சிறப்பாக நடந்தேறியது.
     அறக்கட்டளை உறுப்பினர் க.செயசந்தர்  வந்திருந்தோர் அனைவரையும் சுருக்கமாக வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் க.சீனிவாசன் தமது தலைமையுரையில் உணர்ச்சி பொங்கும் கவிதை பிரவாகத்தோடு காமராசர் புகழை எடுத்துரைத்தார்.
     அடுத்து, அறக்கட்டளையின் மேனாள் ஒருங்கிணைப்பாளரும் தமிழக  அரசின் விருது பெற்ற எழுத்தாளருமாகிய தோழர்.எஸ்ஸார்சி  அவர்கள் அறிமுவுரையாற்றினார். ‘நாம் யார்க்கும் குடியல்லோம்’ என்று முழங்கிய அப்பர் சுவாமிகள் அவதரித்த ஊர் கடலூர் எனத் தொடங்கி, சுந்தரர், வள்ளலார் என மகான்களும் ஜெயகாந்தன் முதலான எழுத்தாளுமைகளும், பல தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கிய, சிரில் முதலிய தலைவர்கள் வாழ்ந்த மண் என கடலூரின் பழமையைக் கூறினார். கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்விழாக்களில் தமிழகத்தின் பல்துறைச் சான்றோர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளை நினைவூட்டி இன்றைய விழாவின் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் நமது மைலம் பகுதியைச் சார்ந்தவரும்  முன்பு அஷ்வகோஷ் என அறியப்பட்டவரும், இன்றைக்கு இராசேந்திரசோழன் என இயங்கி வரும் பெருமகனாரின் பெருமைகளைச் சபையோருக்கு அறிமுகம் செய்து அவரது சிறுகதை ஒன்றை சுவைபட எடுத்துக்கூறி, அதில் தென்னார்காடு மக்களின் வழுக்காறுகள் எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது என்பதை விளக்கினார்.
     பின்னர் நேற்று மறைந்த மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன், சிறுகதை மன்னர் ஜெயகாந்தனின் திருஉருவப் படங்களுக்கு சபையோர் சார்பில் மேடையில் இருந்த தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
     விழாவின் முக்கிய நிகழ்வான மாணவர்களுக்கு பரிசளித்தல் சிறப்பாக நடைபெற்றது. நமது முதுநிலைப் பொதுமேலாளர் திருமதி. செ.லீலா சங்கரி ITS/CDL அவர்கள் தமது கரங்களால் மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கபரிசு, புத்தககங்கள், சான்றிதழ்களை வழங்கினார். மிகுந்த பொறுப்போடு தமது உரையை தமிழில் தயாரித்து வாசித்தார். கடலூர் மாவட்ட மேன்மக்களாகிய அப்பர், சுந்தரர், ஞானியார் அடிகள் புதுமைப்பித்தன், முதலியவர்களை பற்றி  எடுத்துக் கூறி NFTE சங்கம், சங்க வேற்றுமை பாராட்டாது BSNL அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் உள்ளடக்கி தமிழ்விழாவை சிரில் அறக்கட்டளை மூலம் நிகழ்த்துவதை பாராட்டினார்.
     நமது மாவட்ட உதவித்தலைவர் தோழியர்.கீதா பொதுமேலாளருக்கு பொன்னாடையும், நமது மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் தில்லைக் கூத்தனின் சிலையை விழா நினைவுப் பரிசாக அளித்தனர்.
     வாழ்த்துரைப் பகுதியில் அனைத்து சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். முதலில் NFTE சம்மேளனச் செயலர் தோழர் கோவி.செயராமன், “தமிழ் விழாவை நடத்த இந்த நாளைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுத் தெரிவித்தார். “இந்த நாள் காமராசரின் பிறந்த நாள் மட்டுமல்ல, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் பிறந்த நாளும் ஆகும்” மாவட்ட சங்கம் சிரில் அறக்கட்டளை தோற்றுவிக்கபட்ட பின்னணியை விவரித்து “அறக்கட்டளை அடுத்த கட்டம் நோக்கி நகர்வது தமது விருப்பம்” என்றார். “நம்மிடம் நிதிக்குப் பிரச்சனை இல்லை.” நம்மிடம் நிதி உள்ளது. எனவே வெறும் பரிசளிப்பு நிகழ்வோடு நின்றுவிடாது. மேலும் சில இலக்கிய நிகழ்வுகளை நடத்திடத் திட்டமிட வேண்டும்” என வாழ்த்தினார்.
     SNEA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் ப. சிவக்குமார் தமது வாழ்த்துரையில் தமிழ் மொழியின் வல்லின, மெல்லின அமைப்பு முறை அவை சொற்களில் கையாளப்படும் இயல்பான ஓசை நயம் இவற்றை கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் வழிநின்று எடுத்துரைத்து, பரிசுபெறும் மாணவ செல்வங்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் திருக்குறள் இரண்டு குறட்பாக்களுக்கு இலக்கணமாகத் திகழ்கின்றனர் எனப் பாராட்டினார். சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் பயணித்து, சேரநாட்டில் கோயில் கொண்டதைக் கொண்டாடும் சிலப்பதிகாரம் போல NFTE சங்கம் அனைத்து சங்கங்களையும் இணைத்து செயல்படுகிறது” எனப் பாராட்டினார்.
     AIBSNLEA சார்பில் தோழர் S.நடராசன் வாழ்த்துரையில் தமிழில் ‘ழ’ கரத்தின் சிறப்பையும் தமிழின் வளமையும் கூறி மாணவர்களைப் பாராட்டினார்.
     BSNLEU சங்கத்தின் மாவட்டச் செயலர் க.திருஞானசம்பந்தம், ”நமது வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளிலும், தமிழ்மொழி காப்பது உள்பட அரசியல் இருப்பதை எடுத்துக் காட்டினார்.
         
விழாவின் அடுத்த முக்கிய நிகழ்வு, சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் இராசேந்திர சோழனின் ‘சனங்களின் கதை’ என்ற தலைப்பில் அமைந்த ஆழ்ந்த அழுத்தமான தர்க்க ரீதியலான தெளிந்த பேச்சு, விவாதத்திற்கு உரிய பொருண்மை பற்றியும் நாகரீகமாக நமது சிந்தனைக்கு முன் வைத்தார். அவரது உரையில்,
 “சனங்கள் எனும் போது உலகின் எந்த சனங்கள்? நான் தமிழ் சனங்கள் என்றே வரையறுத்துப் பேசுகிறேன்.  மனிதர்களுக்கு அடையாளம் முக்கியம். அச்சில் வார்க்கப்பட்டதுபோல அனைவரும் ஒரே பிரதி போல இருந்தோம் என்றால் வாழ்க்கை ருசிக்காது. பல அடையாளங்கள் உள்ளன, நிறம்,உயரம்,வாழும் இடம், பேசும் மொழி, சார்ந்துள்ள மதம், பிறக்க நேர்ந்த சாதி என மனிதர்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன. இதில் எந்த அடையாளங்கள் இல்லாமலும் நாம் வாழ முடியும் எந்த அடையாளங்களை இழக்க முடியாது என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.
நாம் மதம் மாறலாம், மதம் சாராமலும் வாழலாம், ஆனால் மதம் மாறிய பின்பும் நம்மை விடாது நிற்பது சாதி, சாதி அமைப்பு ஜனநாயகமற்றது. அதனை ஒழிக்க கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும். ஆனால் அவர்களின் குழந்தைகள் இன்று பெற்றோர் இருவரில் எவரின் சாதியையும் சேர்ந்தவராய் இருக்க சட்டம் அனுமதிக்கிறது. அவர்கள் கலப்பு மண சந்ததியர் எனக் குறிப்பது ஒன்றே எதிர்காலத்தில் மறையச்செய்யும் வழி.
மொழி அடையாளத்தை எவரும் விட்டுவிட முடியாது. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் அடையாளம். கருத்துக்களை, எண்ணங்களை வெளியிட உதவும் ஒரு கருவிதான் மொழி எனக் கூறும் இடதுசாரிகள் கருத்து  அவ்வளவு சரியானது அல்ல. நன்றி என்ற ஒரு வார்த்தைக்கு பதில் thanks என்ற வார்த்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றால், சில தலைமுறைக்குப் பிறகு தமிழில் நன்றி என்ற சொல் காணாது போகும். இது மொழி சிதைவுக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும். மாணவர்கள் எவ்வளவு மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். ஆனால் தாய்மொழியை விட்டு விட்டுவிடக் கூடாது. மொழி அழிந்தால், அந்த தேசிய இனம் அழியும்.
பகுத்தறிவாளர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். எந்தக் கடவுள் இல்லை? சாராயமும், சுருட்டும், பலியிடுதலையும் ஏற்கும் எம் சனங்களின் கிராமந்திரக் கடவுளா? அல்லது பொங்கல், சர்க்கரை பொங்கலை மட்டுமே ஏற்கும் மேல்தட்டுக் கடவுளா? எந்தக் கடவுள் இல்லை?
கிராமங்களில் மாரியாத்தாக்களுக்கு கூழ் ஊற்றுவதை நம்பிக்கையோடு செய்யும் எம் சனங்களை கடவுள் இல்லை, என்று நிறுத்தி விட்டால், கூழ் ஊற்றும் திருவிழாவோடு பம்பை, உடுக்கை, முதலிய இடைக்கருவிகளும் கதை சொல்லுதல் என தமிழனின் பண்பாட்டுக் கூறுகளும் அழிந்து போகாதா?
இது குறித்த பல்வேறு புத்தககங்கள் உள்ளன. தமிழன் என்ற தேசிய இனம், தனது அடையாளங்களை இழந்து விட நாம் அனுமதிக்கக் கூடாது என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் மொழி குறித்து நீங்கள் விழா நடத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாய்ப்புக்கு நன்றி”  
விழா திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு ஒத்துழைத்த தோழர்கள், பல்லாற்றானும் விழா சிறக்க உழைத்தோர், விழாவில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், தோழர்கள், மாணவர்கள்,அவர்தம் பெற்றோர்கள், பக்கத்துக்கு மாவட்டமான புதுவையிலிருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் திரளாகக் கலந்து கொண்ட தோழர்கள், ஓய்வு பெற்றோர், கடலூரின் பல தமிழ் அமைப்புகளின் சான்றோர் பெருமக்களுக்கு அறக்கட்டளை செயலர் வீ .லோகநாதன் நன்றி கூறினார்.
அனைவருக்கும் எளிமையான, சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு உணவு அளித்த மூத்தத் தோழர் K.செல்வராஜ் STS அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.
விழாவில் மூத்தத் தோழர். தமிழ்மணி, மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். காமராஜ், திரு K.சமுத்திரவேலு DGM, திருமதி N.ஜெயந்திஅபர்ணா DGM, திரு.K.சாந்தகுமார் DGM(FIN) மற்றும் அதிகாரிகள், மேலும்  கூத்தப்பாக்கம் இலக்கிய சோலையின் தலைவர் பாச்சுடர் வளவ.துரையன், பொறுப்பாளர் வெங்கிடபதி, கடலூர் தமிழ்ச் சங்கத்தின் தங்க சுதர்சனம், பெரியார் பெருந்தொண்டர் வழக்கறிஞர் அழகரசன், த.மு.எ.க சங்கத்தின் மாவட்ட செயலர் பால்கி, பாரதிதாசன் நற்பணி மன்றத்தின் கடல் நாகராஜன் பலரும் விழாவில் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி!
























No comments:

Post a Comment