.

Tuesday, January 27, 2015

ஆர்.கே.லக்‌ஷ்மண் மறைவு-அஞ்சலி




பிரபல கார்ட்டூனிஸ்ட் ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர் லக்‌ஷ்மண் (94) உடல்நலக் குறைவு காரணமாக புனே நகரில் நேற்று காலமானார்.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் சிறுநீரக தொற்று காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை சிறிது தேறிவந்த நிலையில் கடந்த 24 ம் தேதி மீண்டும் மோசமானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது.

மைசூர் முதல் புனே வரை

ஆர்.கே.லக்‌ஷ்மண் தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென் னையில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் மைசூர் மகராஜா காலேஜ் ஹை ஸ்கூலுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால் குடும்பம் அங்கு குடியேறியது. கடந்த 1921 அக்டோபர் 24-ம் தேதி மைசூரில் லக்‌ஷ்மண் பிறந்தார்.

மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் உட்பட அவருக்கு 5 சகோதரர்கள், 5 சகோதரிகள். இவரது மனைவி கமலா, மகன் ஸ்ரீநிவாஸ். ஆரம்ப காலத்தில் ‘தி இந்து’வில் வெளியான ஆர்.கே. நாராயணின் கதைகளுக்கு லக்‌ஷ்மண் ஓவியங்களை வரைந்து வந்தார்.

பின்னர் பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். பணியில் ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றினார்.

காலை 9 மணி முதல் 1 மணி வரை அனைத்து பத்திரிகைகளையும் படிப்பார். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கார்ட்டூன்களை வரைய நேரத்தை ஒதுக்குவார். இரவு 8.30 மணி வரை அலுவலகத்திலேயே தவம் இருப்பார். தனது பணி குறித்து அவர் ஒருமுறை கூறியபோது, கார்ட்டூன் வரைவதை திரைப்படம் எடுப்பதற்கு ஒப்பாகவே கருதுகிறேன். பொருத்தமான செட்டிங், கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரிப்ட் என அனைத்து பணிகளும் ஒரு திரைப்பட தயாரிப்புக்கு இணையாகவே உள்ளது. நாளொன்றுக்கு 10 மணி நேரம் உழைத்தால்தான் தரமான கார்ட்டூன்களை அளிக்க முடியும் என்றார்.

அவர் உருவாக்கிய ‘திருவாளர் பொதுஜனம்’ கார்ட்டூன் பத்திரிகை உலகில் அழிக்க முடியாத ராஜ முத்திரையாக பதிந்துவிட்டது.

கடந்த 2003-ம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதில் அவரது இடதுபக்க உடல்பாகங்கள் செயல் இழந்தன.

அதில் இருந்து சிறிது மீண்டு வந்த அவர் மனைவியுடன் புனேவில் குடியேறினார். பக்கவாதத்தால் இடது கை செயல் இழந்தாலும் வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவரின் பத்திரிகை பணியைப் பாராட்டி மகாசேசே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நன்றி: தி ஹிந்து தமிழ் 


No comments:

Post a Comment